
ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடுகளில் உள்ள ஈரான் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து ஈரான் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மேமன்பரஸ்த் கூறுகையில், இத்தடையால் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகள் தற்போது அமெரிக்காவின் நெருக்கடியில் உள்ளன. அமெரிக்காவின் உள்நோக்க அரசியலுக்கு அவர்கள் பலியாகி விடக் கூடாது என்றார்.
இந்நிலையில் ஈரானின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஆப்ரகாம் லிங்கன் என்ற விமானந்தாங்கிப் போர்க் கப்பலும், பிரிட்டன் மற்றும் பிரான்சின் தலா ஒரு போர்க் கப்பலும், இரு நாட்களுக்கு முன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பாரசீக வளைகுடாவிற்குள் சென்றுள்ளன.
இந்த நீரிணையை மூடுவதற்கான முயற்சிகளில் ஈரான் இறங்கும் பட்சத்தில், அதைத் தடுக்கும் வகையில் மேலும் பல கப்பல்களை அங்கு அனுப்ப வேண்டி வரும் என பிரிட்டன் வெளிவிவகார அமைச்சகம் எச்சரித்துள்ளது.














]
] [



